ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் மகா பாரதத்தை முழுமையாகவும், துல்லியமாகவும் தமிழில் படிக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி கும்பகோணம் பதிப்பை படிப்பது தான். வடமொழியான சமஸ்கிருதத்திலிருந்து ஒரு வார்த்தை விடாமல் இதை தமிழில் மொழிபெயர்த் திருப்பது அவர்கள்தான். இந்த அசுர உழைப்பை பல வருடங்களுக்குப் பிறகு சாதித்திருப்பவர் பதிப்பாசிரியரான எம்.வி.ராமானுஜ சாரியார். பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சாதனைப் படைப்பு, தமிழாக்கம், இப்போது அச்சில் இல்லை. இந்தக் குறையை போக்க இப்போது ஸ்ரீ சங்கரா பதிப்பகத்தின் உரிமையாளர் எஸ்.வெங்கட்ராமன் முன் வந்துள்ளார். இந்த தமிழ் மொழிபெயர்ப்புக்காக ராமானுஜாசனியார் பட்ட சிரமங்களை கண்கள் கசிய விவரிக்கிறார் எஸ்.வெங்கட்ராமன்.
"நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால், கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் பொறுமையாக பல சிரமங்களை எதிர்கொண்டு எம்.வி.ராமா னுஜாசாரியார் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பதிப்பாசிரியராக இருந்தபடி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அவர் 1906ம் ஆண்டு தொடங்கினார். 1932ல் பதினெட்டு பர்வங்களையும் பூர்த்தி செய்தார். இதற்கு பின்னால் அவர் அனுபவித்த சிரமங்களை கேட்டால் கல் மனமும் கறையும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் 1866ம் ஆண்டு பிறந்தவர் ராமானுஜாசாரியார், கிராம பள்ளியில் பயின்ற பிறகு கும்பகோணத்தில் மெட்ரிக்குலேஷன் படிப்பை மேற்கொண்டார். குடும்ப சூழல் காரணமாக அவரால் பட்டப்படிப்பு படிக்க முடியவில்லை. அதனால் மாமாவிடம் சமஸ்கிருதத்தின் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டார். பின் பனாரஸ் சென்று, குமாரசாமி மடத்தில் முறையாக சமஸ்கிருதம் பயின்றார்.
ஆறு மாத காலங்கள் அங்கிருந்தவர்; தன் அம்மாவின் உடல் நிலை காரணமாக தன் கிராமத்துக்கு திரும்பினார். பிறகு சில காலம் கும்பகோணம் நேடிவ் ஹை ஸ்கூல் மற்றும் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகவும், தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் அவருக்கு சுவாமிநாதய்யருடன் பழக்கம் ஏற்பட்டது. மகாபாரதத்தில் உள்ள பல
அரிய விஷயங்களை ராமானுஜாசாரியாருக்கு எடுத்துக் கூறியவர் சுவாமி நாதய்யர்தான். இதே காலகட்டத்தில் மகாபாரத பிரசங்கத்திலும்
ராமானுஜாசனியார் கலந்து கொண்டு அதன் பெறுமைகளை தெரிந்து கொண்டார். அப்போது பிரசங்கத்தில் வந்த பலர் மகாபாரதம் எல்லாரும் படிக்க கூடிய எளிய நடையில் அதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்கள்.
மகாபாரதத்தின் முழு பர்வங்களையும் மொழிபெயர்ப்பது முடியாத காரியம் என்பதால், கடைசி பர்வமான சாந்தி பர்வத்தை உஎஸ்.சந்தானந்தமையங்கார் தமிழாக்கம் செய்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ இவரால் தொடர முடியவில்லை.
இந்நிலையில் ஒரு நாள் தன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் ராமானுஜாசாரியார் அப்போது சிறுவர்கள் மற்றும் பெண்கள் படிக்கக் கூடிய நல்ல தத்துவ மற்றும் நஸ்நெறி கதைகளை மகாபாரதத்தில் இருந்து மொழியாக்கம் செய்யலாம் என்ற பேச்சு அடிபட்டது. இந்த உரையாடலே இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதாவது. சின்னச் சின்ன கதைகளாக தொகுக்காமல், மகாபாரதத்தையே எளிய நடையில் தொகுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு மனதாக முடிவுசெய்தார்கள். இந்தப் பணியை ராமானுஜாசாரியார் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது நண்பர்களின் எண்ணம்.
ஆனால், ராமானுஜாசாரியாருக்கு அதை செய்யபண பலம் கிடையாது. தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று பயந்தார். இருந்தாலும் மனதில் செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் மேலோங்கி இருந்தது. இறுதியில் கடவுள் மேல் பாரத்தை போட்டு துணிச்சலுடன் களத்தில் இறங்கினார்.
சென்னையில் இருந்த சுவாமிநாதய்யரிடம் இது குறித்து பேசினார். தமிழுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறி ரூ.30ஐ ராமானுஜாசாரியாருக்கு அவர் அனுப்பி வைத்து மகாபாரத பதிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டடார்.
மகாபாரதத்தை அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்க முடியாது. எல்லாம் சமஸ்கிருதத்தில் ஸ்லோக வடிவில் இருப்பதால், ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் கவனமாக மொழியாக்கம் செய்ய வேண்டும். இதற்கு சமஸ்கிருதத்தில் அபாரமான தேர்ச்சி இருக்க வேண்டும். எனவே ராமசந்திராசாரியாரை அணுகியிருக்கிறார். இவர் உபன்யாசம் செய்வதில் வல்லவர்.
விஷயத்தை அறிந்த ராமசந்திராசாரியார் உபயனரம் செய்யும் நேரம் தவிர்த்து மற்ற சமயங்களில் மொழியாக்கம் செய்து தருவதாக கூறியிருக்கிறார். அதுபோலவே முதலில் நளோபாக்யானத்தை மொழி பெயர்க்கவும் தொடங்கியிருக்கிறார். ஆனால், அடிக்கடி இவர் உபன்யாசம் செல்ல வேண்டியிருந்ததால், ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு ஸ்லோகங்கள் மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது. இப்படியே போனால் மகாபாரதத்தை முடிக்க முடியாது என்பதால், அ.வேங்கடேசாசாரியாரை அணுகியிருக்கிறார் ராமானுஜ்சரியார்…” என்ற வெங்கட்ராமன், பல சிரமங்களை இதன் பினைனர் ராமானுஜ்சரியார் சந்தித்ததாக பட்டியலிட்டார்.
“செங்கல்பட்டில் இருந்த ஒரு செல்வந்தரிடம் சமஸ்கிருத பண்டிதர்களால் எழுதப்பட்ட மகாபாரதம் இருப்பதாக ராமானுஜாசாரியாருக்கு தெரிய வந்தது. அதைக் கேட்டு வாங்கிப் படித்தவர். எதிர்பார்த்த முறையில் அது இல்லாததால் திருப்பி அனுப்பிவிட்டார். இப்படி பலரை தொடர்பு கொண்டு சமஸ்கிருதத்தில் இருந்த மகாபாரத்தை கேட்டுக்கேட்டு ராமநாசாரியார் வாங்கியது மாநிலம் முழக்க பரவியது. வடமொழியில் இருக்கும் மகாபாரதம் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கும். எனவே ஒரு முழுமையை கொடுக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனால் மாற்று வழியைத் தேட ஆரம்பித்தார். கும்பகோணம் மத்திய விலாஸ் தலைவரான டி.ஆர். கிருஷ்ணாசாரியாரின் மகாபாரதம் தென்தேசத்து பாடத்தை தழுவி இருந்ததால் அதனையே மூல நூலாக வைத்து மொழிபெயர்ப்பதென முடிவு செய்தார்.
ஆனால், இதற்குள் ஏற்கனவே ஆரம்பித்த மொழிபெயர்ப்பு பாதி அளவில் முடிந்திருந்தது. அதை அப்படியே நிறுத்திவிட்டு புதிதாக திரும்பவும் ஆரம்பிக்க திட்டமிட்டார். ஆனால், அவரால் இந்த காரியத்தை முடிக்க முடியாது என்றே பலரும் இகழ்ந்தனர்.
இப்படி தொடர்ச்சியாக பலரும் அவநம்பிக்கை தெரிவித்ததால் ஒரு கட்டத்தில் ராமானுஜாசாரியாருக்கே தன்னால் இதை முடிக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. எனவே வலங்கைமான் ஜோதிடரான கோவிந்த செட்டியாரிடம் ஆருடம் கேட்டார். அவரும் ஒரு காகிதத்தில் சில விஷயங்களை எழுதிக் கொடுத்தார். அதைப் படித்தவுடன், ராமானுஜசாரியாரின் கவலை அதிகரித்தது. இதை வெளியில் சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் மகாபாரத வேலையை மூட்டைக் கட்டி வைத்துவிட சொல்வார்கள் என்று பயந்தார். எனவே அந்த ஆருடக் கடிதத்தை ஒரு உறையில் போட்டு சீல வைத்தார்.
காரணம், அந்த ஆரூட கடிதத்தில் 'பார தம் தமிழ் செய்ய கேட்கிறது. வருடம் பல ஆகும். கவலை அதிகம். முடியும் போது விஷ்ணு தரிசனம் கிடைக்கும். அதில் இருந்து நின்றுவிடும்' என்று எழுதியிருந்தது. ஆனால், எந்த பர்வத்தில் நிற்கும் என்று தெளிவாக எழுதவில்லை, எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு தமிழாக்கப் பணியை தொடர்ந்தார்.
ஆதி பர்வமும், சபா பர்வமும் வெளியானது. அதற்கான செலவு மற்றும் கால அவகாசத்தை பார்த்த போது மற்ற பர்வங்களை வெளியிட முடியுமா என்ற சந்தேகம் ராமானுஜாசவியார் மனதில் எழுந்தது. அதனால் சாந்தி பாவத்தை முடித்துவிட்டு மற்ற பர்வங்களை பிறகு பார்க்கலாம் என்று நினைத்தார். சாந்தி பர்வத்தை வேதாந்தகேசரி பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளை கொண்டு மொழி பெயர்த்தார். ஆனாலும் வேலை விரைவாக நடக்கவில்லை. காரணம், வேதாந்தகேசரி பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளின் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு. இதனால் சாத்தி பர்வத்தின் 420 அத்தியாங்கள் மட்டுமே தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தன.
மற்ற அத்தியாயங்களை யாரைக் கொண்டு மொழி பெயர்க்கலாம் என்ற சிந்தனையில் இருந்த பொது, சாந்தி பர்வத்தை அப்படியே நிறுத்தி விட்டு மற்ற பர்வத்தை வெளியிட நினைத்தார். ஆனால், அதுவும் முடியாத காரியமாக போனது. இதற்கிடையில் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகள் சாந்தி பர்வத்தின் மற்ற அத்தியாயங்களை மொழிபெயர்த்து தந்தார். உத்யோக பர்வத்தை நீலமேக சாஸ்திரிகள் மொழிபெயர்த்தார். இப்படி வேலைகள் நடந்து கொண்டிருக்கையில் 1915ம் ஆண்டு சாந்தி பர்வத்தின் மோக்ஷ தர்மம் அச்சிடப்பட்டது, அப்பாடா என்று பெருமூச்சு விட்ட ராமானுஜாசாரியாருக்கு அடுத்த சோதளை உலகப் போர் வடிவில் வந்தது.
போரின் காரணமாக காகித விலை அதிகமாயிற்று. இரண்டரை அணாவுக்கு வாங்கிய காகிதம் ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல். அதனால் மொழியாக்கம் செய்யப்பட்டும் அச்சிடும் வேலை முடங்கி போனது. போர் முடிந்த பிறரும் காகித விலை குறைய வில்லை. கும்பகோணத்தில் இதை விரைவாக முடிக்க முடியாது என்பதால், சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் பதிப்புக்கு தேவையான உதவிகள் கிடைக்கவில்லை. செலவு பல மடங்கு அதிகமானது. கடைசியாக 1923ம் ஆண்டு கிராமத்துக்கே திரும்பிவிட முடிவு செய்தார்.
இந்நிலையில் விஜயநகர திவான் வி. டி. கிருஷ்ணமாசாரியார், சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் கர்ண பர்வத்தை கொடுக்க நேரில் சென்றார் ராமானுஜாசாரியார். அப்போது வி.டி.கிருஷ்ணமாசாரியார், ‘மகாபாரதம் காலதாமதமாவதாகவும், விரைவில் முடிக்குமாறும்' கேட்டுக் கொண்டார். ராமானுஜாசாரியார், தன்னால் நடத்த முடியவில்லை என்றும், அதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். அதைக் கேட்ட திவான், இவ்வளவு காலம் சிரமப்பட்டதற்கு பலன் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி நண்பர்கள் மூலம் ஒரு தொகையை சேகரித்து தந்துள்ளார். அந்த பணம்தான் மற்ற பர்வங்கள் வெளியாக முக்கிய காரணமாக இருந்தது.
வன பர்வத்தின் கடைசிப் பக்கம் அச்சிட்டு முடிந்தவுடன் ராமாஜாசாரியாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மகாபாரத தொகுப்பு வெளிவந்த பிறகு அவரை பலர் பாராட்டினார்கள். ‘மஹாமஹோபாத்யாய்' என்ற பட்டம் அளித்து கவுரவித்தனர்.
ராமானுஜாசாரியார் செய்த காரியம் பெரியது. இதை முடிக்க அவருக்கான செலவு, ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம். அன்றைய தேதியில் இதன் மதிப்பு அதிகமல்ல. மிக மிக அதிகம். சில அத்தியாயங்கள் அச்சிட மட்டுமே பத்தாயிரம் செலவு செய்திருக்கிறார். எல்லாவற்றையும் விட, கடைசியாக தன் கையிருப்பிலிருந்து ரூபாய் 15 ஆயிரம் போட்டுத்தான் முழு மகாபாரதத்தையும் முடிந்துள்ளார்." என்று சொன்ன வெங்கட்ராமன்.
1940ம் ஆண்டு ஆரூடத்தில் சொன்னது போல ராமானுஜாசாரியார் விஷ்ணு தரிசனம் கிடைக்கப் பெற்று மறைந்ததாக குறிப்பிடுகிறார். "ராமானுஜாசாரியாரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ராஜகோபாலன் பதிப்பகத்தை நடத்தி வந்தார். ஆனால், இவரால் அதைத் தொடர முடியவில்லை. அதனால் என் தாத்தாவிற்கு விற்றுவிட்டார். 1949ல் அப்பா மொத்த பர்வங்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்தார். அப்போது நானும் என் அண்ணனும் இது குறித்து அக்கறை செலுத்தவில்லை. படிப்பு, வேலை, குடும்பம் என்று இருந்தோம். இந்த சமயத்தில் தான் எனக்கு தாத்தா, அப்பா விட்டு சென்றதை நாமும் தொடரலாமே என்று தோன்றியது. 1988ம் ஆண்டு இந்தப் பதிப்பகத்தை தொடங்கினேன். சின்னக் குழந்தைகள் எளிதில் புரியக்கூடிய தமிழ் இலக்கண தொகுப்பை வெளியிட்டேன். அதன் பின்தான் மகாபாரதத்தை மறுபடியும் கொண்டு வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அந்தக் காலத் தமிழை மாற்றி அமைத்தால் சரியான பொருள் கிடைக்காது என்பதால் அதை அப்படியே மறு பதிப்பு கொண்டு வர முடிவு செய்து 2000ம் ஆண்டு இந்தப் பணியை தொடங்கினேன். 2004ம் ஆண்டு முதல் நான்கு பாகங்களைத்தான் வெளியிட முடிந்தது. பொருளாதார சிக்கல் ஏற்படவே சிறிது காலம் அமைதியாக இருந்தேன்.
பிறகு 2007ல் மற்ற ஐந்து பாகங்களை வெளியிட்டேன் ஒன்பது பாகங்கள் என்றாலும் அதை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவ்போது வரும் பணத்தை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அச்சிடுவேன். என் மனைவியும் எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்தார். 2010ல் அனைத்து பாகங்களும் முழுமையாக முடிவடைந்தது.
ஆரம்பத்தில் இந்த காலத்தில் யார் இதையெல்லாம் வாங்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், நான் எதிர்பார்க்காத வகையில் இளைஞர்கள் பலர் இதை வாங்கிச்சென்றார்கள், இப்போது மறுபடியும் அத்தனை பர்வங்களையும் மறு பதிப்பாக கொண்டு வர முடிவு செய்திருக்கிறேன். இதை பெற விரும்புபவர்கள் venkat.srichakra6@gmail.com க்கு இமெயில் அனுப்பி முன பதிவு செய்து கொள்ளலாம். என்று சொன்ன வெங்கட்ராமன், நடேச சாஸ்திரிகள் எழுதிய ராமாயணத்தை ஆறு காண்டங்களாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.